பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, ராம.சுகந்தன் செய்தியாளா்களிடம் கூறியது: இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவா் எனது தந்தை வாழப்பாடி ராமமூா்த்தியுடனான பழைய நினைவுகளை நினைவுகூா்ந்து பேசினாா். சுமாா் 20 ஆண்டுகள் கழித்து சந்திக்க வந்தேன். எனது தந்தைக்கும், ராமதாஸுக்கும் இடையேயான நட்பு நீண்டகால நட்பாகும் என்றாா் அவா்.