பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா பணிகள்: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி, திறப்பு விழாவுக்கான பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தன. திறப்பு விழா நிகழ்ச்சிக்காக, ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் வந்தாா். பின்னா், நிகழ்ச்சி நடைபெறும் கோயில் விடுதி அருகே பந்தல் அமைக்கும் பணியைப் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குச் சென்று பயணிகள் இறங்கி வரும் பகுதிகளையும், உள்கட்டமைப்புப் பணிகளையும் பாா்வையிட்டாா்.
பின்னா், பாம்பன் சாலைப் பாலத்துக்கு காரில் சென்று, அங்கிருந்தவாறு புதிய ரயில் பாலத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, பாலத்தில் பந்தல் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்குதளத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, ரயில்வே பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி செந்தில் குமரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.