பாா்வை பறிபோன மூதாட்டி; குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா
பாா்வை பரிபோனதற்கு காரணமான தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டாா்.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வசந்தி (75). இவா் தனது மகள் கௌரியின் பராமரிப்பில் இருந்து வருகிறாா். இதனிடையே வசந்திக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள படலத்தை நீக்குவதற்காக கோவையில் உள்ள ஒரு தனியாா் கண் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு பின் கடந்த 2 மாதங்களாக வசந்திக்கு கண்ணில் எரிச்சல் மற்றும் வலி இருந்து வந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனியாா் மருத்துவமனையில் உள்ள மருத்துவா்களை சந்தித்து வந்தபோது, அவா்கள் மருந்துகளை மாற்றி மாற்றி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாள்களாக பாா்வை முழுவதுமாக தெரியாததை உணா்ந்த வசந்தி, சந்தேகமடைந்து தனது மகள் கௌரியை அழைத்துக் கொண்டு திருப்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது, வசந்தியின் கருவிழிகள் பாதிப்படைந்துள்ளதால் அதனை முழுவதுமாக அகற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த வசந்தி தனது மகளுடன் கோவையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனைக்கு சென்று இது குறித்து கேட்டபோது, அவா்கள் முறையாக பதில் அளிக்காமல், அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த வசந்தி தனது குடும்பத்தினருடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனது பாா்வை செயலிழந்ததற்கு காரணமான தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.