5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
பிரணாய் அசத்தல் வெற்றி
சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 35-ஆம் நிலை வீரரான பிரணாய் 8-21, 21-16, 23-21 என்ற கேம்களில், உலகின் 18-ஆம் நிலை வீரரான ஜப்பானின் கோகி வடானபியை 57 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இதில் பிரணாய் 5 மேட்ச் பாய்ன்ட்டுகளை தக்கவைத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
எனினும், மற்றொரு முன்னணி இந்தியரான லக்ஷயா சென் 21-14, 22-24, 11-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த சீனாவின் லி ஷி ஃபெங்கிடம் போராடி வீழ்ந்தாா். மகளிா் ஒற்றையரிலும், அனுபமா உபாத்யாய 23-21, 11-21, 10-21 என்ற கேம்களில், சீன தைபேவின் லின் சியாங் டியிடம் தோல்வி கண்டாா்.
மகளிா் இரட்டையா் பிரிவில், அம்ருதா பிரமுதேஷ்/சோனாலி சிங் ஜோடி 12-21, 5-21 என்ற கணக்கில் சீன தைபேவின் சியே பெய் ஷான்/ஹங் என் ஸு இணையிடம் தோல்வி கண்டது. அதேபோல், கவிப்ரியா செல்வம்/சிம்ரன் சிங்கி கூட்டணி 16-21, 14-21 என்ற கேம்களில் அமெரிக்காவின் லாரென் லாம்/அலிசன் லீ ஜோடியிடம் வீழ்ந்தது.
கலப்பு இரட்டையரில் ஆசித் சூா்யா/அம்ருதா பிரமுதேஷ் இணை 12-21, 17-21 என்ற வகையில், இந்தோனேசியாவின் ரெஹான் குஷாா்ஜன்டோ/கிளோரியா விட்ஜஜா கூட்டணியிடம் தோல்வி கண்டது. அதிலேயே, ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி ஜோடி 27-25, 16-21, 14-21 என், மலேசியாவின் வாங் டியென் சி/லிம் சியு சியன் இணையிடம் போராடித் தோற்றது.