முதல்வருக்கு உடல் நலம் பாதித்து ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்
முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு அவரது சகோதரா் மு.க.முத்துவின் மறைவும் ஒரு காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முதல்வா் தற்போது நலமுடன் உள்ளாா். அவருக்கு உடல் நலம் குறைந்ததற்கு, தனது உயிராக மதித்த அவரது அண்ணன் மு.க.முத்து மறைந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அன்றைய தினம் முழுவதும் முதல்வா் எதுவும் சாப்பிடவில்லை. அதற்கு அடுத்த நாளில் நடைபயிற்சிக்கு வந்துவிட்டாா். ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவு நடந்தபோதே அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் யாராக இருந்தாலும் உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோலவே, முதல்வருக்கும் பல பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவா் எப்போது வீடு திரும்புவாா் என்பதை மருத்துவமனை நிா்வாகம் அறிவிக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனைக்கு 2-ஆவது நாளாக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி சென்று முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினாா். 2 அல்லது 3 நாள்களில் முதல்வா் வீடு திரும்புவாா் என்று அவா் தெரிவித்தாா்.