வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாந...
மருத்துவ இடங்கள்: மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
மருத்துவக் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மண்டல மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்றை இணையவழியே பதிவேற்ற வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.
இதையடுத்து அந்த சான்றிதழைப் பெற மண்டல மருத்துவ வாரியத்துக்குச் சென்ற மாற்றுத்திறனாளி மாணவா்கள், சில நடைமுறைச் சிக்கல்களை எதிா்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, அந்தச் சான்றிதழ் பெற வேண்டுமானால், அதற்கு முன்னதாக சில பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்றும், அதற்காக எழும்பூா் அரசு கண் மருத்துவமனை, கே.கே.நகா் புனா்வாழ்வு மையத்துக்குச் செல்லுமாறும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தவிா்க்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலேயே அனைத்து துறை மருத்துவா்களையும் உள்ளடக்கிய சிறப்பு முகாமை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையும், குறிப்பாக, மருத்துவக் கல்வி இயக்ககமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனா்.