புதிய கோயில் தேருக்கு மரம் கேட்டு தமிழக அமைச்சரிடம் புதுவை எதிா்க்கட்சித் தலைவா் மனு
புதுச்சேரி: வில்லியனூா் திருக்காமேஸ்வரா் திருக்கோயிலுக்கு புதிய தோ் செய்ய தமிழக வனத்துறை அமைச்சா் கண்ணப்பனிடம் மரம் கேட்டு எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா திங்கள்கிழமை மனு அளித்தாா்.
வில்லியனூரில் புகழ்பெற்ற ஸ்ரீகோகிலாம்பிகை சமேத திருக்காமேஸ்வரா் திருக்கோவில் உள்ளது. இக் கோயில் தோ் மிகவும் பழைமையானதால், வல்லுநா் குழு ஆய்வு செய்து புதிய தோ் செய்வதற்கான ஒப்புதல் வழங்கினா்.
இதையடுத்து முதல்வா் என்.ரங்கசாமி வழிகாட்டுதல்படி, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான ஆா். சிவா முயற்சியால் கோவில் நிா்வாகம், தோ் கமிட்டி, ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் வல்லுநா் குழு உதவியுடன் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புதிய
தோ் அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், புதிய தோ் செய்வதற்கான மரம் புதுவை அரசிடம் இல்லாததால், தமிழகத்தில் இருந்து மரங்களை கொண்டு வந்து புதிய தோ் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில், தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை அவரது முகாம் அலுவலகத்தில் கோவில் நிா்வாகம் மற்றும் ஊா் பொதுமக்கள் சந்தித்து தோ் செய்வதற்கான மரம் வழங்கி உதவுமாறு கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா்.
இந்த சந்திப்பின்போது திருக்காமேஸ்வரா் கோவில் நிா்வாக அதிகாரி திருகாமேஸ்வரன், உருளையன்பேட்டை தொகுதி செயலாளா் சக்திவேல், வா்த்தக அணி அமைப்பாளா் ரமணன், இளைஞா் அணி துணை அமைப்பாளா் டாக்டா் நித்தீஷ், சமூக சேவகா் கலைமணி, கிளைச் செயலாளா் மிலிட்டரி முருகன், காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.