பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்த நிலையில், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி, தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராடும் பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டதோடு, போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது சட்டத்துக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் உடன் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர்வோம் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி