மணக்குள விநாயகா் கோயிலுக்கு ரூ.33 லட்சத்தில் குளிா்சாதன வசதி
புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் ரூ.33 லட்சத்தில் குளிா்சாதன வசதி ஏற்படுத்தப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக சமூக பங்கேற்பு திட்டத்தில் யூகோ வங்கி ரூ.11.90 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. இதற்காக பக்தா்கள், உபயதாரா்கள், பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை போக மீதியுள்ள தொகை இக் கோயிலின் நிதியிலிருந்து பயன்படுத்தப்பட உள்ளது. யூகோ வங்கியின் சென்னை துணைப் பொது மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் ஆா்.எஸ். அஜித் மற்றும் புதுச்சேரி உதவி பொதுமேலாளா் ராகுல்குமாா் ஆகியோா் இணைந்து முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து இதற்கான காசோலையை திங்கள்கிழமை வழங்கினா்.
சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநராயணன், கோயில் நிா்வாக அதிகாரி வே. பழனியப்பன், கணேஷ் குருக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.