மதிமுக-விலிருந்து கூண்டோடு வெளியேறும் ஆதரவாளர்கள்; மல்லை சத்யாவின் அடுத்த மூவ் என்ன?!
ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்த இடத்தில் மல்லை சத்யா இருந்தார். கொரோனா நேரத்தில் வைகோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் திடீரென துரை வைகோ கட்சிக்குள் என்ட்ரியானர். பிறகு ம.தி.மு.க-விலிருந்த சீனியர் நிர்வாகிகளுக்கு எதிராக லாபி செய்யத் தொடங்கினார். அந்த வரிசையில் மல்லை சத்யாவையும் சீண்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் 'ஈகோ' மோதல் உச்சமடைந்து. ஒரு கட்டத்தில் வைகோவிடம், 'மல்லை சத்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்' எனத் துரை வைகோ தெரிவித்தார். அதற்கு வைகோ சம்மதிக்கவில்லை. இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இருப்பினும் இருவருக்கும் இடையிலான 'ஈகோ' மோதல் தொடர்ந்தது.

இந்தச்சூழலில்தான் கடந்த 24.6.2025 அன்று ம.தி.மு.க-விலிருந்து விலகிய திருப்பூர் முத்து ரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் தி.மு.க-வில் இணைத்தனர். அதற்கு சில நாட்களுக்கு முன்பு முத்து ரத்தினமும், மல்லை சத்யாவும் ஒன்றாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 30.6.2025 அன்று தாயகத்தில் நடந்த கூட்டத்தில் பிரச்னை வெடித்தது. துரை வைகோவின் ஆதரவாளரும் அவைத்தலைவருமான அர்ஜுன் ராஜ், "தி.மு.க-வுடன் மல்லை சத்யா ரகசிய உறவில் இருக்கிறார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அப்போது தி.மு.க-வின் சின்னத்தில் எங்களைப் போட்டியிடச் சொன்னது ஸ்டாலினுடைய பெருந்தன்மைதான் எனப் பேட்டி கொடுத்தார்" என்றார். அதற்கு மல்லை சத்யா, "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததையெல்லாம் இப்போது ஏன் பேசுகிறீர்கள்" எனக் கேட்டு எதிர்ப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட வைகோ, "அர்ஜுன் ராஜ் கேட்ட கேள்விக்கு மல்லை சத்யா பதிலளித்துவிட்டார். ஆனால் எனது கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியாது. ஒரு காலத்தில் என்னோடு மிகவும் நெருக்கமாக இருந்த திருப்பூர் துரைசாமி, என் மனசாட்சியைப் போல நான் நேசித்த தம்பி வல்லம் பஷீர் உள்ளிட்டவர்கள் எல்லாம் இன்று வெளியே சென்று என் மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மல்லை சத்யா நீங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். திருப்பூர் முத்து ரத்தினம் அறிவாலயம் சென்று ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க-வில் சேர்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை நீங்களும் அவரும் ஒரே காரில் சென்றிருக்கிறீர்கள். இதெல்லாம் எனக்குத் தெரியாதென்று நினைக்கிறீர்களா?. விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லைன்னா போயிடுங்க" என்று கொதித்தார். இதில் மனமுடைந்த மல்லை சத்யா பாதியிலே வெளியேறிவிட்டார்.

பிறகு ஊடகம் ஒன்றில் பேசிய வைகோ, "சில காலமாகக் கட்சியின் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இறுக்கமான முகத்துடன்தான் மல்லை சத்யா இருக்கிறார். வெளிநாடுகளுக்கும் செல்லும்போது ம.தி.மு.க-விலிருந்து வருகிறேன் என அவர் சொல்வதில்லை. மாமல்லபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் என்றுதான் சொல்கிறார். என்னிடம் சொல்லாமல்தான் அங்கெல்லாம் செல்கிறார். விடுதலைப் புலிகள் வரலாற்றில் மாத்தையாவைவிட பிரபாகரனுக்கு விசுவாசமாக யாரேனும் ஒருவர் இருந்தது உண்டா?. ஈழம் அமைந்தால் மாத்தையாவைத்தான் முதலமைச்சராக ஆக்குவேன் என என்கிட்டேயே தலைவர் பிரபாகரன் சொன்னார். அந்த பிரபாகரனைக் கொலை செய்வதற்கே, இந்திய ரா உளவுத்துறை அமைப்பு மாத்தையாவையும், கிருபனையும் மற்றவர்களையும் கைப்பற்றிக் கொண்டது. அந்த திட்டத்துடன்தான் அவர்கள் இருந்தனர். அது பொட்டம்மானால் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பேரையும் வைத்து பிரபாகரன் கூட்டம் நடத்தினார். அதில், 'தலைவர் பிரபாகரனைக் கொலை செய்ய வேண்டும் என்ற அந்த சதித் திட்டத்துக்கு நான் உடன்பட்டது உண்மைதான்' என்று மாத்தையா அழுதுகொண்டே சொன்னார். அப்போது பிரபாகரன், 'என் வாழ்க்கையில் நான் ஒரு சொட்டு கண்ணீர் விட்டது கிடையாது.. உன்னை என் பிள்ளை மாதிரி வெச்சிருந்தேன்டா… உன்னையைத்தான் முதலமைச்சராக்குவேன் எனச் சொல்லி இருந்தேன்டா.. நீ எப்படி இப்படி துரோகம் செஞ்ச..' எனக் கேட்டார். ஆனால், அவர் அப்படிப் பாடுபட்டார்.. இப்படிப் பாடுபட்டார்.. இந்தியச் சிப்பாய்களை ஒப்படைக்க மாத்தையாவைத்தான் அனுப்பி வைத்தார் பிரபாகரன்.. புலிகளின் பத்திரிகை பொறுப்பைக் கூட அவரிடம் கொடுத்திருந்தார்கள்.. என முன்பு அப்படி செஞ்சார் இப்படி செஞ்சார் எனச் சொன்னால் எப்படி ஏற்க முடியும்? ஒரு காலத்தில் நன்றாக பணியாற்றிவிட்டு பின்னர் துரோகம் செய்வது என்பது சரித்திரத்தில் நிறையப் பார்த்திருக்கிறேன் நான்.. அதைப் பற்றி எல்லாம் நான் இப்போது விரிவாகப் பேச விரும்பவில்லை" எனக் கொதித்தார்.
இதற்கு மல்லை சத்யா, "வைகோ சொன்ன வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கினார், வைகோ. தற்போது துரை வைகோவுக்குக் கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார். இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தன் மகனுக்காக, எனக்குத் துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார்" என்றார். இதனால் ம.தி.மு.க-வில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்தச்சூழலில்தான் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்கள். கடந்த 18.7.2025 அன்று மகாபலிபுரத்தில் நகரச் செயலாளர் பாபு தலைமையில் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். அவர்கள், 'மல்லை சத்யா வாழ்க.. சேனாதிபதி மல்லை சத்யா வாழ்க.. திராவிடம் வாழ்க.. பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக..' என கோஷங்களை எழுப்பினர். பிறகு தங்களது கார்களிலிருந்த ம.தி.மு.க கொடிகளைக் கழற்றி தலையைச் சுற்றித் தூக்கி வீசினர். மேலும் அங்கிருந்த ம.தி.மு.க கொடிக்கம்பங்களிலிருந்தும் கொடிகளை அவிழ்த்து வீசினர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள், "எவ்வளவோ பேர் கட்சியைவிட்டுச் சென்றபோதும் மல்லை சத்யாதான் எங்கும் போகாமல் வைகோவோடு இருந்தார். கட்சி இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு அண்ணன் மல்லை சத்யாதான் காரணம். தனது மகன் துரை வைகோவிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகவே உண்மையான விசுவாசிக்குத் துரோகிப் பட்டத்தை வைகோ கொடுத்துவிட்டார். அதற்குக் காரணமாகக் கட்சியிலிருந்து வெளியேறியவர்களுடன் அண்ணன் தொடர்பில் இருக்கிறார் என்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் வாரிசு அரசியலை எதித்துதான் வைகோ தனிக்கட்சியைத் தொடங்கினார். தற்போது தி.மு.க-வுடன் தானே கூட்டணி வைத்திருக்கிறார். அவர் செய்தால் சரி. அண்ணன் மல்லை சத்யா தன்னுடன் இயக்கத்தில் பயணித்தவர்களின் வீட்டிற்கு நல்லது, கெட்டதற்குச் சென்றால் தவறா? வைகோவின் குற்றச்சாட்டுக்களை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறோம். மேலும் பலர் விரைவில் வெளியேறவுள்ளனர். சில தினங்களில் வைகோவைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தயாராகி வருகிறோம். அதற்கு அண்ணன் தலைமை தாங்குவார்" என்றனர்.