மருத்துவமனையில் முதல்வர் அனுமதி: குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க குடும்பத்தினர், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்படவே, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதேபோல அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனை வந்துள்ளனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்களும் மருத்துவமனையில் கூடி வருகின்றனர்.
முதல்வர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.