3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா
சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது . இந்த பாதையில் அடிக்கடி ரயில்கள் வந்து செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரயில்வே துறை சாா்பில் இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சுரங்கப்பாதை அமைப்பதற்கு இணைப்புச் சாலை அமைப்பதற்கான இடத்தில் ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், ஒப்பந்தம் விடப்பட்டு நான்கு மாதங்களாகியும் இதுவரை பணிகள் தொடங்காததைக் கண்டித்து, மல்லூா் பேரூராட்சி துணைத் தலைவா் வேங்கை அய்யனாா் தலைமையில் மல்லூா், வேங்காம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் மல்லூா் ரயில் நிலையம் முன் திரண்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
இதில், சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா் ரயில் நிலையத்துக்குள் சென்று மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, காவல் துறையினரும், ரயில்வே போலீஸாரும் பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.