சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு
மதுரையில் மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்த மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், கொந்தகையைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (45). இவா் கடந்த 13 ஆண்டுகளாக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மதுரை அண்ணாநகா் கோமதிபுரம் பகுதி மல்லிகை மேற்குத் தெருவில் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதாகப் புகாா் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற ஜெயக்குமாா், மின்மாற்றியின் மீது ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது திடீரென நிலை தடுமாறிய ஜெயக்குமாா் மின்மாற்றியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரையில் இரு நாள்களுக்கு முன்பு கோச்சடை பகுதியில் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்திலேயே உயிரிழந்தாா். இந்த நிலையில், மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்த ஊழியா் உயிரிழந்த சம்பவம் ஊழியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.