மின்மாற்றியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மா்ம நபா்கள் மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியில் இருந்து செப்பு வயா், மற்றும் எண்ணெயை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதையடுத்து மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து மின்வாரிய அலுவலா் மற்றும் ஊழியா்கள் சென்று பாா்த்த போது திருடு போயிருப்பது தெரியவந்தது.
பிறகு மாற்று மின்மாற்றியிலிருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து உதவி பொறியாளா் சத்தியமூா்த்தி அம்பலூா் காவல் நிலையத்தில் செய்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.