மும்பை: சிறுவன் மீது நாயை ஏவிக் கடிக்கவிட்டுச் சிரித்த நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
மும்பை மான்கூர்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றில் ஹம்சா (11) என்ற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அந்நேரம் மொகமத் சொஹைல் ஹசன் என்பவர் கொண்டு வந்த வளர்ப்பு நாய் ஆட்டோவில் ஏறியது.
இதனால் சிறுவன் பயத்தில் ஆட்டோ சீட்டின் ஓரத்திற்குச் சென்றான். ஆட்டோவில் ஏறிய நாய் சிறுவன் ஹம்சாவிற்கு அருகில் சென்று அவனைக் கடிப்பது போன்று நடந்து கொண்டது.
சிறுவன் பயத்தில் உதவி கேட்டு கத்தினான். ஆனால் ஆட்டோவில் இருந்த ஹசன் நாயைக் கட்டுப்படுத்தாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.
நாயின் ஆக்ரோஷத்தைப் பார்த்து சிறுவன் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். அதனால் அவனை நாய் கடித்துவிட்டது. அப்படி இருந்தும் நாய் உரிமையாளர் நாயைக் கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிறுவன் ஆட்டோவில் இருந்து குதித்து வெளியில் ஓடினான்.

அப்படியும் அவனது சட்டையை நாய் கடித்து இழுத்தது. சிறுவன் தப்பித்து ஓடியபோது அவனை நாய் விரட்டி சென்றது. இச்சம்பவங்களைப் பார்த்துக்கொண்டிருந்த யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. மாறாக அவர்கள் நடந்த சம்பவத்தைத் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுப்பதில் பிஸியாக இருந்தனர். அவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.
இச்சம்பவம் குறித்து ஹம்சா கூறுகையில், ''நாய் என்னைக் கடித்துவிட்டது. இதனால் தப்பி ஓடினேன். அப்படி இருந்தும் எனது சட்டையைக் கடித்தது. நாய் உரிமையாளரிடம் உதவி கேட்டேன். ஆனால் அவர் உதவ முன்வரவில்லை. அவர் சிரித்துக்கொண்டிருந்தார்'' என்று தெரிவித்தார்.
சிறுவனைத் தாக்கியது பிட்புல் என்ற ஒரு வகை வளர்ப்பு நாயாகும். இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு ஹசனை அழைத்து விசாரித்தனர். ஒரு கும்பல் இதனை வேடிக்கையாகச் செய்ததாகப் பின்னர் தெரிய வந்துள்ளது.