மைசூர் சாண்டல் விளம்பரத் தூதர் தமன்னா! கர்நாடகத்தில் எதிர்ப்பு!
கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்ததற்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
100 ஆண்டுகளைக் கடந்து சந்தையில் நிலைத்து நிற்கும் மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தை மாநில அரசின் கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நடத்தி வருகின்றது.
ஆண்டுக்கு ரூ. 1,800 கோடி வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம், உள்ளூரில் 18 சதவிகிதமும், தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் 82 சதவிகிதமும் விற்பனையை செய்து வருகின்றது.
இதனால், மைசூர் சாண்டல் சோப்பின் விற்பனையை நாடு முழுவதும் கொண்டு செல்ல நடிகை தமன்னாவை விளம்பரத் தூதராக கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக தமன்னாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 6.2 கோடி ஊதியமாக கொடுக்கப்படவுள்ளது.
கர்நாடக மக்கள் எதிர்ப்பு
கன்னட திரையுலகில் திறமைவாய்ந்த பல நடிகைகள் இருக்கும்போது, பாலிவுட் நடிகையான தமன்னாவை தேர்ந்தெடுத்தது குறித்து கர்நாடக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள தொழில்துறை அமைச்சர் பாட்டீல், “விரிவான ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தை தாண்டி பிற மாநிலங்களின் சந்தையை அடையவே தமன்னா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தை நிபுணர்களுடன் ஆலோசித்து பொதுத் துறை நிறுவன வாரியம் எடுத்த சுயாதீன முடிவு இதுவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாந்த் கூறுகையில்,
“மைசூர் சாண்டல் சோப்பை இந்திய அளவில் எடுத்துச் செல்ல விளம்பரத் தூதர் தேவை என்பதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்ட ரஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பிரபலங்கள் வேறு சோப்களின் தூதராக இருக்கிறார்கள். அதனால், அவர்களை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.
கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்களின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் கன்னட மக்கள்தான். இந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் லாபம் கர்நாடக மக்களின் வளர்ச்சிக்குதான் பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மைசூர் சாண்டல் சோப்பின் தூதராக வேறு மாநிலத்தவரை ஒப்பந்தம் செய்வது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, 2006 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, இந்த நிறுவனத்தின் முதல் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.