ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!
ராஜஸ்தானில் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் உள்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையத்தின்படி, ராஜ்சமந்த், சிரோஹி, உதய்பூர் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாகூர், சுரு, ஜலூர், உதய்பூர் மற்றும் சிரோஹி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்தது, அதே நேரத்தில் சிகார், ஹனுமன்கர், பிகானர், ஜோத்பூர், தோல்பூர் மற்றும் அஜ்மீர் ஆகிய இடங்களில் கனமழை பதிவானது. நாகூரில் மட்டும் அதிகபட்சமாக 173 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டா, பூண்டி மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நகரங்களின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் குடியிருப்பாளர்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மூன்று மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் சிவில் அதிகாரிகளுக்கு உதவ ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரப்பூர் அறிக்கையின்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 7 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் 57 குழுக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெய்ப்பூர் உள்பட பல மாவட்டங்களில் உள்ள உள்ளூர் நிர்வாகங்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது, மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தண்ணீர் தேங்கும் பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.