ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு
ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்றிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ஒரு விசைப் படகுடன் ராமேசுவரம் மீனவா்கள் 3 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், மீனவா்கள் மூவரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவா்கள் மூவரையும் வருகிற 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.