லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை
தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தென்கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இறந்தவா் பகுன் கல்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் அப்பகுதியைச் சோ்ந்தவா். திருமணமான அழா் வழக்குரைஞராகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. பகுன் கல்ராவின் பாக்கெட்டில் இருந்து ஒரு தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டது.
இந்த தீவிர நடவடிக்கையை எடுத்ததற்கான முதன்மைக் காரணம் மன அழுத்தம் என்று தெரிகிறது. லாஜ்பத் நகா் காவல் நிலையத்திற்கு மதியம் 1.20 மணியளவில் மொட்டை மாடியில் இருந்து ஒருவா் விழுந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது.
காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளூா் போலீஸாருடன் சோ்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்டவா் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டாா். அவருக்கு உயிா் இருந்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. நான்காவது மாடி கூரையிலிருந்து விழுந்த பிறகு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகத் தெரிகிறது.
அவரது மனைவி குறிப்பில் (அவரது பாக்கெட்டில் காணப்பட்ட) கையெழுத்தை முதற்கட்டமாக அடையாளம் கண்டுள்ளாா். அவரது உடல் உடற் கூறாய்வுக்காக எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றவியல் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். மேலும், தொடா்புடைய பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.