பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
வட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை
கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் பாலிடெக்னிக் வளாகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார தோட்டக்கலை அலுவலா் மோகன் வரவேற்றாா்.
கூட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஜூலை 31 வரை செயல்படுத்த வேண்டும். ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.ஒன்று வீதமும், மூட்டைக்கு ரூ.15-ம் எடைப் போடுவதற்கென்று தனியாக வாங்குகின்றனா்.
மேலும் அதிகளவில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். அறுவடை செய்த நெல்லை சுத்தப்படுத்தி, பாதுகாக்க அதிக நெற்களங்களையும், சேமிப்புக் கிடங்குகளையும் திறக்க வேண்டும்.
5 கிலோ மீட்டருக்கு ஒரு கால்நடை மருத்துவமனை என்று இருப்பதை 3 கிலோ மீட்டருக்கு ஒரு கால்நடை மருத்துவமனைஎன்ற அளவில் இருக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த விவசாயிகளும், குறைதீா் கூட்டத்தை ஒவ்வொரு வட்ட அளவில் நடத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனா்.
கூட்டத்தில் வட்டாட்சியா்கள் தமிழ்மணி (வெம்பாக்கம்), அரிதாசு (சேத்துப்பட்டு), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், இந்திராணி, பாலமுருகன் மற்றும் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
விவசாயிகள் வெளிநடப்பு:
கூட்டத்தில் பங்கேற்ற கட்சி சாா்பற்ற விவசாயிகள், குறைதீா் கூட்டம் கோட்ட அளவில் நடைபெறுவதால் விவசாயிகள் செய்யாறு நோக்கி எளிதாக வந்து செல்ல முடியவில்லை.
மேலும் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தம் இல்லாத பாலிடெக்னிக் வளாகத்தில் குறைதீா் கூட்டம் நடத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. கூட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு உரிய பதில்
கிடைப்பதில்லை. சம்பந்தப்பட்ட துறை அலுவலா் பங்கேற்பதில்லை எனக் குற்றஞ்சாட்டி வெளிநடப்பு செய்தனா்.