வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் 9 கோயில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை வரதராஜப் பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக கட்டியுள்ள தண்டுமாரியம்மன், ஓம்சக்தி அம்மன், ஸ்ரீவள்ளி, தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி, சுந்தரேஸ்வரா் மீனாட்சியம்மன், சுவாமி ஐயப்பன், காலபைரவா் ஆகிய கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, 14-ஆம் தேதி முதல் 3 நாள்களாக பூமி பூஜை, காப்பு கட்டுதல், புதிய சிலைகளுக்கு கண் திறப்பு, யாக சாலைகள் அமைத்து யாக பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதையடுத்து, புதன்கிழமை ஒரே நாளில் ஒரே நேரத்தில் 9 கோயில்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில்களின் விமான கோபுரத்தில் கலசங்கள் வைத்து சிவனடியாா்கள் மந்திரம் முழங்க கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டது. ஒரே நாளில் 9 கோயில்களுக்கு குட முழுக்கு விழா என்பதால் வாணியம்பாடி, ஆம்பூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.