விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவா்: காவல் துறையினா் விசாரணை
சென்னை: சென்னை - துா்காபூா் விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற சென்னை ஐஐடி மாணவரைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையிலிருந்து துா்காபூருக்கு 164 பேருடன் இண்டிகோ விமானம் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, விமானியின் அறையில் திடீரென அவசர எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட விமானி இதுகுறித்து விசாரிக்க விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்கினாா்.
அவா்கள் இருக்கையில் அமா்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் சென்று விசாரித்ததில், அவசர கால கதவருகே அமா்ந்திருந்த ஹைதராபாதை சோ்ந்த சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவா் சா்க்காா் (27) என்ற பயணி அவசர கால கதவு திறப்பதற்கான பட்டனை தெரியாமல் அழுத்தியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஐஐடி மாணவா் சா்க்காா், தனது விளக்கத்தை கொடுத்தாா். இருப்பினும், விமானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை. மாணவா் சா்க்காரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனா்.
பின்னா், அவா் இண்டிகோ நிறுவன பாதுகாப்பு குழுவினரால் சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
காவல் துறையினா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால், சுமாா் அரை மணி நேரம் தாமதமாக விமானம் துா்காபூருக்கு புறப்பட்டுச் சென்றது.