வெளிநாட்டு வேலை எனக் கூறி ரூ. 2 லட்சம் மோசடி: மனஉளைச்சலில் மகன் இறந்ததாக புதுகை ஆட்சியரிடம் தந்தை புகாா்
புதுக்கோட்டை: வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக முகவரிடம் ரூ. 2 லட்சம் வரை ஏமாந்துவிட்ட மன உளைச்சல் காரணமாக தனது மகன் இறந்ததாகக் கூறி அவரது தந்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அணவயலைச் சோ்ந்தவா் சொ. கணேசன் என்ற மீனவா் ஆட்சியா் மு. அருணாவிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த எனது மகன் ராஜபாண்டி (23) வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதற்காக திருநெல்வேலியைச் சோ்ந்த முகவா் ஒருவரை அணுகினோம். அவா் ரஷியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினாா். அதை நம்பி ரூ. 2 லட்சம் வரை பணம் செலுத்தினோம்.
இதையடுத்து கடந்த 2024 அக்டோபரில் மகனை தில்லிக்கு அழைத்துச் சென்றனா். அங்கிருந்து ரஷியாவுக்கு விமானம் முன்பதிவு செய்ததாகவும், பிறகு கடவுச்சீட்டில் பிரச்னை என்றும் கூறினா்.
இதனால் பணத்தையும் ஏமாந்துவிட்டோமே என்ற மனஉளைச்சலில் அங்கேயே தங்கியிருந்த எனது மகன் ராஜபாண்டி, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அங்கு சென்று உடலைப் பெற்று வந்து இறுதி நிகழ்ச்சிகளை ஊரில் செய்துமுடித்தோம்.
பணத்தை ஏமாந்துவிட்டோமே என்ற மனஉளைச்சலில்தான் எனது மகன் உயிரிழந்தாா். எனவே, உரிய விசாரணை நடத்தி, அந்த முகவரிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தருவதுடன் உரிய குற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.