கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத...
`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; பின்னணி என்ன?
ஹர்ஸ்வர்தன் ஜெயின்
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் போலி வெளிநாட்டு தூதரகம் ஒன்று செயல்படுவதாக மாநில சிறப்பு போலீஸ் படைக்கு தகவல் கிடைத்தது. அத்தூதரகத்தை சேர்ந்த ஹர்ஸ்வர்தன் ஜெயின் என்பவர் தூதரக நம்பர் பிளேட் பொருத்திய ஆடம்பர கார்களில் சுற்றிக்கொண்டிருந்தார்.
அதோடு காஜியாபாத்தில் இரண்டு மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து வெஸ்ட்அண்டார்டிகா தூதரகம் என்ற பெயரில் தூதரக அலுவலகத்தை நடத்தி வந்தார்.
அங்கிருந்து கொண்டு வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை ஹர்ஸ்வர்தன் அனுப்பிக்கொண்டு இருந்தார். இது தவிர ஹவாலா மூலம் பணமோசடியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.
மத்திய புலனாய்வுத்துறை கொடுத்த தகவலின் பேரில் உத்தரப்பிரதேச சிறப்புபடை போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி ஹர்ஸ்வர்தன் ஜெயினை கைது செய்தனர்.

அவரது அலுவலகத்தில் இருந்து வெஸ்ட்அண்டார்டிகா நாட்டு தலைவர்களுடன் ஜெயின் இருப்பது போன்ற புகைப்படங்கள், அந்நாட்டு கரன்சி, தூதரக பாஸ்போர்ட் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அனைத்தும் போலியானது என்று தெரிய வந்துள்ளது.
அவரிடமிருந்து 12 நாட்டு தூதரக பாஸ்போர்ட், வெளிநாட்டு தூதரகங்களின் சீல் அடிக்கப்பட்ட ஆவணங்கள், 34 நாடுகளின் முத்திரைகள், 44 லட்சம் பணம், வெளிநாட்டு கரன்சி, 18 தூதரக நம்பர் பிளேட்கள், 4 ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீஸாரின் விசாரணையில் செபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா போன்ற சிறிய அங்கீகரிக்கப்படாத நாடுகளின் தூதரக பிரதிநிதி என்று ஜெயின் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்.

வெஸ்ட் அண்டார்டிகா நாடு எங்குள்ளது?
4 வெஸ்ட் அண்டார்டிகா நாடு மிகவும் சிறியது ஆகும். அதனை இதுவரை எந்த நாடும் அங்கீகரித்தது கிடையாது. 2001-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கடற்படை அதிகாரி டிராவிஸ் மெக்ஹென்றி என்பவர் வெஸ்ட்அண்டார்டிகாவை கண்டுபிடித்தார்.
இது 6.20 லட்சம் சதுர மைல் தூர பரப்பு கொண்டது ஆகும். அண்டார்டிகா கண்டத்தில் இருக்கும் நிலப்பரப்புக்கு என்று தனியாக எந்த வித சட்டதிட்டங்களும் இல்லாததை தெரிந்து கொண்டு தான் கண்டுபிடித்த வெஸ்ட்அண்டார்டிகாவிற்கு தன்னையே மெக்ஹென்றி அதிபராக அறிவித்துக்கொண்டார். அதோடு அந்நாட்டிற்கு உள்பட்ட பகுதியை வேறு எந்த நாடும் உரிமை கொண்டாடவும் மெக்ஹென்றி தடை விதித்தார்.
வெஸ்ட்அண்டார்டிகாவில் 2356 பேர் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாரும் அங்கு வசிக்கவில்லை. இந்த நாட்டிற்கு தனி கொடி மற்றும் கரன்சி இருக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள ஜெயின் 2011-ம் ஆண்டு சேட்டிலைட் போன் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச போலீஸார் போலி தூதரகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த பிறகு வெஸ்ட்அண்டார்டிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதுடெல்லியில் வெஸ்ட் அண்டார்டிகா தூதரகம் என்று கூறி புகைப்படங்கள் பகிரப்பட்டு இருந்தது. ஹர்ஸ்வர்தன் ஜெயின் தூதரக அதிகாரியாக இருப்பதாகவும், 2017-ம் ஆண்டில் இருந்து தூதரகம் செயல்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயின் இந்தியாவில் அடிக்கடி ஏழைகளுக்கு இலவச சாப்பாடு வழங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயின் தன்னை வெளிநாட்டு தூதரக அதிகாரி என்ற முறையில் வெளிநாட்டில் வேலை பெற்றுக்கொடுப்பதாகவும், தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாகவும் கூறி மோசடி செய்து வந்துள்ளார்.
அதோடு போலி கம்பெனிகள் மூலம் ஹவாலா ஏஜெண்டாகவும் செயல்பட்டு வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்ற தலைவர்களுடன் ஜெயின் இருப்பது போன்ற மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குறிய சந்திராசாமியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் கிடைத்து இருக்கிறது.
போலி கோர்ட், போலி வங்கி கிளை, போலி டோல் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக போலி தூதரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.