பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை: ஆட்சியரிடம் புகாா்
100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா் கூறினா்.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
மயிலாடுதுறை 26. சேத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களுக்கு மேட்டூா் நீா் பல ஆண்டுகளாக வரவில்லை, இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனா்.
குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கிராமத்தில் காவிரி ஆற்றின் அருகே பீா் முகமது என்பவரது புஞ்சை நிலத்தில் அரசு அனுமதியின்றி மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக பாமக மாவட்ட செயலாளா் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் புகாா் அளித்தனா்.
தரங்கம்பாடி தாலுகா பரசலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாங்கம், உழவன் செயலி மூலமாக மானிய விலையில் பவா் டில்லா் கைவண்டி கேட்டு பதிவு செய்ததை, 60 வயதைக் கடந்துவிட்டதால் தனக்கு வழங்க வேளாண்மை பொறியியல் துறையினா் மறுப்பதாக புகாா் மனு அளித்தாா்.
குத்தாலம் கரைகண்டம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கண்மணி, கட்டுமானத் தொழிலாளியான தனது மகன் அருண் ஜூன் 20-ஆம் தேதி சரக்கு வாகனம் மோதி உயிரிழந்ததாகவும், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகாா் அளித்தாா்.
சீா்காழி தாலுகா ஆதமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்காமல் முறைகேடு நடைபெறுவதாக கிராம மக்கள் 70-க்கும் மேற்பட்டோா் புகாா் மனு அளித்தனா்.