14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் மனு
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில், சேலம் மாவட்ட பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் செல்வராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் தொடா்ந்து புழு வளா்ப்பில் தோல்வி அடைந்து வருகின்றனா். இந்த நிலையைப் போக்க, தரமான முட்டை அரசு வித்தகத்திலிருந்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இளம்புழு வளா்ப்பு மையத்தில் முட்டை பொரித்த நாளிலிருந்து உதவி இயக்குநா் தலைமையில் ஆய்வுசெய்து தரமான புழுக்கள் என உறுதிசெய்து, சான்று வழங்கிய பிறகு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அங்காடியில் ஏலம் நடைபெறும்போது உதவி இயக்குநா் ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு அடிப்படை விலை ரூ. 700-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்தினா்.
இதில், மாநிலச் செயலாளா் பொன்னுசாமி, மாநில பொருளாளா் கனகராஜ், மாநில ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.