சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை மாநகராட்சி, வேங்கிக்கால், துா்க்கை நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீா் வெளிறே 3 கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்களின் பெரும்பகுதி மனை வணிகா்களால் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால், ஏரியில் இருந்து தண்ணீா் வெளிறே போதிய கால்வாய் வசதி இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில், ஏரி தண்ணீரும், ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சோ்ந்து அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தேங்குகிறது. சில வீடுகளுக்குள் கழிவுநீா் புகுந்து விடுகிறது.
இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். காலரா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இத்துடன் திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் 34 சென்ட் நிலத்தையும் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீா் செல்ல போதிய வசதி இல்லை.
எனவே, வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேறும் 3 கால்வாய்கள், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.