புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்ற...
60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பது தெரியவந்தது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து ஆரோக்கியசாமி கூறுகையில்,"கோயில்வழி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 60 வயதாகிறது. திருமணம் ஆகவில்லை. எனது வீட்டு அருகில் இருக்கும் முத்தாரம்மன் கோயிலுக்குச் செல்லும்போது, அங்குள்ள பூசாரி சிவசுப்பிரமணியம் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் திருமணம் செய்து வைப்பதாக ஆசைகாட்டி பெண் பார்க்க அழைத்துச் சென்றார். மேலும், அந்தப் பெண்ணுக்கு பணத்தேவை இருப்பதாக என்னிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, எனக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்து ரூ.15 லட்சத்தை சிவசுப்பிரமணியனிடம் கொடுத்தேன். இதன் பின்னர், திருமணம் குறித்து அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனக்குத் திருமணமும் செய்து வைக்கவில்லை.

சில நாட்கள் கழித்துதான் மோசடி செய்து என்னிடம் பணத்தைப் பறித்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறினார். அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 60 வயது முதியவருக்கு திருமண ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்தது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.