Malegaon Blast Case: 17 ஆண்டுகால விசாரணை - பாஜக-வின் பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட மேலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது .
அப்பொழுது புனித ரம்ஜான் மாதம் சென்று கொண்டிருந்ததால் மசூதியில் ஏராளமானோர் தொழுகைக்காக வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஆறு பேர் கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அப்பொழுது இந்த விவகாரம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது

சாத்வி பிரக்யா
முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல்துறைக்குட்பட்ட மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த சதி செயலுக்கு பின்னணியில் தீவிர ஹிந்து வலதுசாரி குழுக்கள் இருக்கிறார்கள் என கண்டறிந்த மகாராஷ்டிரா காவல் துறையின் இந்த சிறப்பு படையினர், அதில் மிக முக்கியமாக பாஜக முன்னாள் எம்.பி ஆன சாத்வி பிரக்யாவும் ஒருவர் என கண்டறிந்து கைது செய்தது.
அவருடன் சேர்த்து முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித், மேஜர் ரமேஷ் உபாத்தியாயா, அஜய் ரிகர்கர், சுதாகர் தி வேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி உள்ளிட்ட நபர்கள் அடுத்தடுத்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். பின்னர் இந்த விவகாரம் கடந்த 2011 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அவர்கள் ஆரம்பத்தில் இருந்து விசாரணையை மேற்கொண்டனர். இதில் மேலே சொன்ன ஏழு குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு விசாரணை என்பது தொடங்கியது.

பிறழ் சாட்சி
கிட்டத்தட்ட 323 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் அதில் 34 சாட்சிகள் பின்னர் பிறழ் சாட்சியங்களாக மாறினார்கள். சுமார் 11 ஆயிரம் ஆவணங்கள், 400 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளிட்டவையும் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் அரசு தரப்பு சார்பில் சுமார் 1,300 பக்கங்களுக்கும் அதிகமான எழுத்துப்பூர்வமான வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மும்பையில் உள்ள என் ஐ எ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நிரூபிக்கப்படவில்லை
இதில் பாஜகவின் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த விவரங்கள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு சதி செய்து இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பதையும் நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறிவிட்டது.’ உள்ளிட்டவற்றை காரணங்களாக நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது
மேலும் ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித் இந்த தாக்குதல் சம்பவத்திற்காக ஆயுத உதவிகளை செய்தார் என்பதையும் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியவில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது

`தீவிரவாதத்திற்கு மதம் என்பது கிடையாது'
குண்டு வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட ஆறு பேரின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம், `தீவிரவாதத்திற்கு மதம் என்பது கிடையாது. எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒருவருக்கு எதிரான யூகங்களின் அடிப்படையில் அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியாது. அதற்கு வலுவான ஆதாரங்கள் என்பது தேவை. இந்த வழக்கில் அத்தகைய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.