Rain: வயநாடு நிலச்சரிவு பகுதியில் கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்... மிரட்சியில் மக்கள்!
முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான இடங்களில் கடந்த 3
நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல பகுதிகளிலும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கும் இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 - தேதி இரவு ஏற்பட்ட கொடிய நிலச்சரிவால் சிதைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதையுண்ட புஞ்சிரி மட்டம், சூரல்மலை, முண்டகை பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக இந்த பகுதிகளில் காட்டாற்று வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புஞ்சிரிமட்டம் பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவிற்கு கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்ட கோரமான பிரமாண்ட நீர்வழி தடத்தில் இதுவரை லேசான நீரோட்டம் இருந்து வந்த நிலையில், இந்த மழையால் தற்போது கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. முண்டகை ஆற்றின் குறுக்கே ராணுவம் அமைத்துக் கொடுத்த தற்காலிக பாலமான பெய்லி பாலம் அதிரும் வகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை உள்ளுர் மக்கள் மிரட்சியுடன் பார்த்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், "தற்போது நிலவி வரும் இடைவிடாத மழையும் காற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட கொடிய பேரழிவு நாளை நினைவுபடுத்துகிறது. நிலச்சரிவின் சாட்சியாக சிதைந்த நிலையில் நிற்கும் வீடுகளுக்கு ஊடாக பாய்ந்தோடும் வெள்ளம் விவரிக்க முடியாத அளவிற்கு பயத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பான பகுதிகளில் அரசு உதவியுடன் தங்கி வருகிறோம்" என்றனர்.