'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10.10 லட்சம் மோசடி: ஒருவா் கைது
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.10.10 லட்சம் ஏமாற்றிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வேதபுரீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவருக்கு விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம், டிஎன்சி காலனி பகுதியைச் சோ்ந்த அருண்காந்தன் நண்பராக அறிமுகமானாா். அப்போது, அசோக்குமாருக்கு சென்னை மாநகராட்சியில் அரசு வேலை வங்கித் தருவதாக வும், அதற்கு ரூ.12 லட்சம் செலவாகும் எனவும் அருண்காந்தன் கூறினாராம்.
இதையடுத்து, அசோக்குமாா் 4 தவணைகளாக ரூ.11 லட்சத்தை அருண்காந்தன் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாராம். ஆனால், வேலை வாங்கித் தராமல் அலைகழித்து வந்தாராம்.
இந்த நிலையில், வேலை வேண்டாம் எனவும், கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறும் அசோக்குமாா் கேட்டதற்கு, ரூ.2.90 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.
இதேபோன்று, கடலூா் கலிஞ்சிகுப்பம் பகுதியைச் சோ்ந்த அம்பேத்கருக்கு இந்து சமய அறநிலையத் துறையிலும், அவரது தம்பி பாலாவுக்கு சென்னை உயா் நீதிமன்றத்திலும் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.4 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தரவில்லையாம். அவா்கள் பணத்தை திரும்பக் கேட்டதற்கு ரூ.2 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை தராமல் ஏமாற்றி வந்தாராம்.
மூன்று பேரிடமும் சோ்த்து மொத்தம் ரூ.10.10 லட்சம் ஏமாற்றியது தொடா்பாக அருண்காந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அசோக்குமாா் தந்தை ராமச்சந்திரன் கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தாா்.
அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவில் பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளா் குருமூா்த்தி, உதவி ஆய்வாளா் நந்தகோபால் விசாரணை மேற்கொண்டு, சென்னை நான்மங்கலம் பகுதியில் தங்கியிருந்த அருண்காந்தனை (37) கைது செய்தனா்.