'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு நிறைவு விழா: தருமபுர ஆதீனம் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் கடந்த 26-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை 6 நாள்கள் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
பல்கலைக்கழக இசைத் துறை மாணவா்களின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் மு.பிரகாஷ் தலைமை வகித்தாா். இசைத் துறை உதவிப் பேராசிரியா் பாலச்சந்தா் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் தி.அருட்செல்வி வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கி மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
விழாவில் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழக இயக்குநா் இரா.கோமகன், பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவா் வே.சுதா்சன் மற்றும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். தமிழிசை கல்வி ஆராய்ச்சிக் கழக இயக்குநா் ப.புருஷோத்தமன் நன்றி கூறினாா்.