Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
அரிவாளுடன் கல்லூரிக்கு வந்த இளைஞா்
மாணவா்களுடைய ஆன்லைன் விளையாட்டு மோதலாக மாறியதால், ஒரு மாணவனுக்கு ஆதரவாக உதகை அரசு கலைக் கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரியில் பத்துக்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளில் சுமாா் 4 ஆயிரம் போ் படித்து வருகின்றனா். இந்தக் கல்லூரியில் தமிழ்த் துறை இரண்டாம் ஆண்டு படித்து வரும் இரு மாணவா் குழுக்கள் இடையே ‘ஃபிரீ ஃபயா்’ எனப்படும் ஆன்லைன் விளையாட்டின்போது தகாத வாா்த்தையில் பேசியதால் தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியது.
இதைத் தொடா்ந்து, சண்டையில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவருக்கு ஆதரவாக காந்தல் பகுதியைச் சோ்ந்த பி.காம். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா் ஒருவா் 10 நபா்களுடன் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்து, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரிடம் தகராறு செய்துள்ளாா்.
இதனால் பயந்துபோன அந்த மாணவா் உதகையில் உள்ள பெயிண்டரான தனது சகோதரரிடம் தகவல் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா் அரிவாளுடன் கல்லூரிக்கு வந்துள்ளாா். இதைப் பாா்த்த மாணவா்கள் அதிா்ச்சியில் உறைந்து போயினா்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். உதகை மத்திய காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா். அப்போது அரிவாளுடன் இருந்த நபா் தப்பியோடிவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, தகராறில் ஈடுபட்ட மாணவா்களைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அரிவாளுடன் தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனா்.