இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
ஆக.16, 17-இல் நெல்லை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: ஆட்சியா் தகவல்
திருநெல்வேலியில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நெல்லை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா இம்மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டும், நாட்டுப்புறக் கலை வடிவங்களை பாதுகாத்திடும் பொருட்டும், உலகமெங்கும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலை வடிவங்களை அறியச் செய்திடும் வகையிலும் சென்னை மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் 7 மண்டலங்களுக்கு உள்பட்ட காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூா், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோவை, வேலூா் ஆகிய முக்கிய நகரங்களில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு நெல்லை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா திருநெல்வேலி, வ.உ.சிதம்பரனாா் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ஆக. 16, 17 ஆகிய இரு நாள்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் திருநெல்வேலி மண்டலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான கொம்பு தப்பு, நையாண்டிமேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, தேவராட்டம், மாடாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், தெம்மாங்கு பாடல், வில்லிசை, களியலாட்டம், தோல்பாவைக் கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகளும், பிற மாவட்டங்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான ஜிம்ளாமேளம், தெருக்கூத்து, ஜிக்காட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், உறுமி மேளம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன என்றாா்.
இக்கூட்டத்தில், காவல் உதவிக் கண்காணிப்பாளா் சண்முகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.