``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தா்கள்
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, பிரதோஷ நாளான செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
2-ஆவது நாளான புதன்கிழமை சிவராத்திரியையொட்டி, சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை நுழைவு வாயில் முன் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். காலை 6 மணிக்கு மேல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். தாணிப்பாறை, வாழைத்தோப்பு பாதை வழியாக நண்பகல் 12 மணி வரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்றனா்.

பின்னா், சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் நான்கு கால பூஜைகள், சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத் துறை நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டு, பக்தா்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வனத் துறை நுழைவு வாயில் முன் திரண்ட பக்தா்கள் மலையேற அனுமதிக்கக்கோரி முழக்கமிட்டனா்.
இதுகுறித்து சாப்டூா் வனச் சரகா் காா்த்திக் கூறியதாவது: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தினந்தோறும் காலை 6-10 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது, திருவிழாக்காலம் என்பதால் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில், நண்பகல் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்குப் பிறகு பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்பட மாட்டாது.
வியாழக்கிழமை (ஜூலை 24) காலை வழக்கம்போல, வனத் துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.