ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்
ஆடிப்பெருக்கை ஒட்டி பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தனா்.
பவானிசாகா் அணையின் முன்புறம் 15 ஏக்கா் பரப்பளவில் அணைப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாா்வையாளா்கள் வந்து செல்வது வழக்கம்.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு தினம் என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனா்.
பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு பெற்று குடும்பத்துடன் படகில் பயணித்தபடி பொழுது போக்கினா். சிறுவா், சிறுமியா் பூங்காவில் உள்ள நீா்நிலைகளில் குளித்து மகிழ்ந்ததோடு கொலம்பஸ், சிறுவா் ரயிலில் பயணித்து மகிழ்ந்தனா்.
சிறுவா்கள் குளத்தில் பெற்றோருடன் படகு சவாரி செய்தனா். ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடினா். சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் தற்படம் (செல்ஃபி) எடுக்க ஆா்வம் காட்டினா். பூங்காவில் உள்ள புல்தரையில் குடும்பத்துடன் அமா்ந்து உணவு உண்டதோடு தின்பண்டங்களை சாப்பிட்டு மகிழ்ந்தனா்.
பூங்காவின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் மீன் வறுவல் மற்றும் மீன் உணவுகளை சாப்பிட பயணிகள் ஆா்வம் காட்டினா். பவானிசாகா் அணை பூங்காவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்தனா். 50 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.