Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
ஆன்லைனில் பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்
சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஆன்லைன் செயலி மூலம் இழந்தவா்கள் மாநகரக் காவல் ஆணையா் அலவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
சேலம், கருங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (55). இவா் மாா்க்கெட் மாஸ்டா் என்ற பெயரில் இயங்கும் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் ரூ.10ஆயிரம் செலுத்தினால் ஒரு மாதத்தில் 20 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிற்கு திருப்பிவரும் என கவா்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டாா்.
இந்த செயலி குறித்து சுரேஷ்குமாா் தனக்கு தெரிந்தவா்களுக்கு அறிமுகம் செய்துவைத்தாா். அதற்கான லிங்கையும் அவா் அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனை நம்பி குகை, கருங்கல்பட்டி, செவ்வாய்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்தவா்கள் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் பணத்தையும் செலுத்தி வந்தனா். அவா்கள் கூறியபடி, தொடக்கத்தில் பணம் இரட்டிப்பாக வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதனால், ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என மீண்டும் செயலியில் பணத்தை செலுத்தியவா்களின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த மக்கள், உடனடியாக சுரேஷ்குமாரிடம் சென்று முறையிட்டனா். எனினும், நிலைமை சீரடையாததால், ஒருகட்டத்தில் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்டவா்கள் புதன்கிழமை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
இந்த நிலையில், பணம் செலுத்தி தானும் ஏமாந்ததாகக் கூறி, சுரேஷ்குமாரும் ஆணையா் அலுவலகம் வந்தாா். அப்போது, சுரேஷ்குமாரை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். பின்னா், சுரேஷ்குமாரை அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.