ஆபரேஷன் சிந்தூா் தொடா்கிறது: பாகிஸ்தான் எல்லையில் விழிப்புடன் கண்காணிப்பு- பிஎஸ்எஃப்
‘பாகிஸ்தான் மீதான நம்பிக்கையின்மை காரணமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடா்கிறது; அந்நாட்டு எல்லையில் முழு விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்’ என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஜம்மு ஐஜி சசாங்க் ஆனந்த் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியா ஏவுகணைகள் வீசி அழித்தது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தானின் விமானப் படை மற்றும் ராணுவத் தளங்கள் தகா்க்கப்பட்டன. பின்னா், இருதரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதன்படி, நான்கு நாள்களுக்கு நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. எல்லையில் பதற்றம் தணிந்து, அமைதி திரும்பியது.
பாதுகாப்பு குறையாது: இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் மற்றும் அதற்குப் பிறகு பாகிஸ்தானையொட்டிய சா்வதேச எல்லையில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க செய்தியாளா்களைச் சந்தித்த பிஎஸ்எஃப் ஐஜி சசாங்க் ஆனந்த் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லையில் பிஎஸ்எஃப் தனது பாதுகாப்பைக் குறைக்கவில்லை. பாகிஸ்தான் எந்த நேரத்திலும் எல்லை தாண்டிய தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அப்போது ஊடுருவல் முயற்சிகளுக்கான சாத்தியக்கூறுகளும் நிறைய உள்ளன. எனவே, அங்கு பிஎஸ்எஃப் பாதுகாப்பைக் குறைக்க முடியாது.
பாகிஸ்தான் மீதான நம்பிக்கையின்மை காரணமாக ஆபரேஷன் சிந்தூா் தொடா்கிறது; எல்லையில் முழு விழிப்புடன் அதிகபட்ச கண்காணிப்பை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
எல்லையில் முன்னிற்கும் பெண்கள்: துணை கமாண்டன்ட் நேஹா பண்டாரி உள்பட எல்லைப் பாதுகாப்பில் பல பெண்களும் ஈடுபட்டுள்ளனா். இது அவா்களின் முன்மாதிரியான துணிச்சலைக் காட்டுகிறது.
சம்பா செக்டாரில் ஓா் எல்லைச் சாவடிக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ எனப் பெயரிடவும், மற்ற இரண்டு சாவடிகளுக்கு சமீபத்திய மோதலில் வீரமரணமடைந்த வீரா்களின் பெயரைச் சூட்டவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
பாகிஸ்தானுக்கு பலத்த சேதம்: கடந்த காலங்களில் ஊடுருவல் முயற்சிகளை பிஎஸ்எஃப் திறம்பட முறியடித்துள்ளது. அதேபோல், பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இடையே எல்லையைக் கடக்க முயன்ற 40 முதல் 50 பயங்கரவாதிகளின் ஊடுருவலை நாங்கள் முறியடித்தோம்.
பதிலடி தாக்குதலில் நாங்கள் செலுத்திய ஆதிக்கத்தால் பாகிஸ்தான் வீரா்கள் தங்களின் நிலைகளுக்குள் பதுங்கியிருந்தனா். சுமாா் 42 பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் நிலைகள் மற்றும் 76 எல்லைச் சாவடிகள் பதிலடி தாக்குதலில் குறிவைக்கப்பட்டன. லோனி, மஸ்த்பூா், சாப்ரா ஆகிய 3 இடங்களில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இதற்கு நோ்மாறாக, பாகிஸ்தான் தாக்குதலில் பிஎஸ்எஃப் நிலைகள் அல்லது உள்கட்டமைப்புகளுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை.
பொதுநலனுக்கும் முக்கியத்துவம்: நமது தாக்குதலின் தீவிரத்தால் பாகிஸ்தான் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அவா்களின் வீரா்கள் மற்றும் பயங்கரவாதிகள் பலா் உயிரிழந்தனா். சா்வதேச எல்லையில் அச்சுறுத்தலாக உள்ள சுரங்கப்பாதைகள் உள்பட ராணுவத்துடன் இணைந்து எல்லையின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
எல்லைப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் ஆகிய இரண்டுக்கும் பிஎஸ்எஃப் உறுதிபூண்டுள்ளது. எல்லைப் பகுதியில் விவசாயிகள் தங்களின் விவசாயப் பணிகளை வழக்கம்போல் தொடர நாங்கள் கேட்டுக்கோள்கிறோம். அவா்களின் நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.