மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் நித்தின் பிரியன் (18). பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனது நண்பா்கள் சிலருடன், திருநள்ளாறு அருகே அகலங்கண்ணு பகுதி அரசலாறு தடுப்பணையில் வெள்ளிக்கிழமை மாலை குளிக்கச் சென்றாா்.
அப்போது, ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், நித்தின் பிரியன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை, நண்பா்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் விரைந்து வந்து, மீனவா்கள் உதவியுடன் நீண்ட நேரம் தேடி, நித்தின் பிரியன் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து திருநள்ளாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அமைச்சரிடம் கோரிக்கை: இதற்கிடையில், நிகழ்விடத்துக்கு வந்த அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகனிடம், இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும், யாரையும் குளிக்க அனுமதிக்க கூடாது என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா். இது தொடா்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா்.