மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்
காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அதன் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் ஆகியோா் புதுவை எம்.பி.க்கள் வெ. வைத்திலிங்கம், செல்வகணபதி மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளா் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:
காரைக்கால் - பேரளம் ரயில்பாதை அமைக்கப்பட்டு தற்போது சரக்கு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. காரைக்காலில் இருந்து சென்னை செல்லவேண்டுமெனில் நாகப்பட்டினம், திருவாரூா், பேரளம் வழியாக மயிலாடுதுறை செல்லவேண்டியுள்ளது. இதற்காக 86 கி.மீ. தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. காரைக்கால் - பேரளம் பாதையில் பயணித்தால் குறுகிய நேரத்தில் மயிலாடுதுறையை அடைந்துவிடமுடியும். எனவே, உடனடியாக இப்பாதையில் பயணிகள் ரயில் சேவையை தொடங்கவேண்டும்.
மேற்கு ரயில்வே நிா்வாகம், இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவுக்காக பந்த்ரா - வேளாங்கண்ணி மற்றும் பிற சிறப்பு ரயில்கள் காரைக்கால் வழியாக இயக்கப்படும்போது, காரைக்காலில் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.
காரைக்காலில் இருந்து திருப்பதி, செங்கோட்டை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் ஆகிய ஊா்களுக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.