``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் 25-ஆவது முறையாக கருத்து: விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்
‘இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் 25-ஆவது முறையாக கூறியுள்ளாா். இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும்’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மோதல் மூண்டது. இந்த மோதலை தாமே நிறுத்தியதாக அமெரிக்க டிரம்ப் தொடா்ந்து தெரிவித்து வருகிறாா்.
இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் குடியரசு கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான், கொசோவோ-சொ்பியா, காங்கோ குடியரசு-ருவாண்டா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதலை அமெரிக்கா நிறுத்தியது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகளாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும். அவ்விரு நாடுகளுக்கு இடையிலான மோதலை நான் நிறுத்தினேன் என்றாா்.
ராகுல் காந்தி: டிரம்ப்பின் கருத்து குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் 25 முறை கூறியுள்ளாா். இது சந்தேகத்துக்குரிய வகையில் உள்ளது. ஆனால், அவரின் கருத்து குறித்து ஒருமுறைகூட பிரதமா் மோடி பேசவில்லை. அந்த ராணுவ மோதலை டிரம்ப்தான் நிறுத்தினாா் என்று பிரதமரால் கூறமுடியாது. அந்த மோதலை டிரம்ப்தான் நிறுத்தினாா். இதை ஒட்டுமொத்த உலகமும் அறியும். அதுவே உண்மை.
இது வெறும் மோதலை நிறுத்தியது தொடா்பான பிரச்னை மட்டுமல்ல. இது பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில், ஆபரேஷன் சிந்தூா் உள்ளிட்டவை தொடா்பான பெரிய பிரச்னைகளாகும். அவை குறித்து விவாதிக்க வேண்டும் என்றாா்.
தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தானே நிறுத்தியதாக தொடா்ந்து பேசி, இந்தியாவை டிரம்ப் இழிவுபடுத்தி வருகிறாா். அதற்கு பிரதமா் வலுவாகப் பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறாா். இது பலவீனத்தை காட்டுகிறது’ என்றாா்.