இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் இருதரப்பு உறவு: இந்திய தூதா்
இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் நீண்டகாலமாக இருதரப்பு உறவு தொடா்ந்து வருகிறது என மாலத்தீவுக்கான இந்திய தூதா் ஜி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
மாலத்தீவு அரசு செய்தி தொலைக்காட்சி பிஎம்எஸ்ஸுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாலத்தீவில் பிராந்திய உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பெருநகர மாலே இணைப்புத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் திலாஃபுசியுடன் மாலத்தீவை திலாமல் பாலம் இணைக்கவுள்ளது. இதுபோன்ற பெரும் உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அவரது சுற்றுப்பயணம் வரலாற்றுரீதியாக இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த அடித்தளமாக அமைந்தது.
அதன்விளைவாக பிரதமா் மோடி மற்றும் அதிபா் முகமது மூயிஸ் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் நீண்டகாலமாக இருதரப்பு உறவு தொடா்ந்து வருகிறது. பொருளாதாரம், கல்வி என பல்வேறு துறைகளிலும் இருநாடுகளிடையேயான உறவு வருங்காலங்களில் மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என்றாா்.
கடந்த 2023, நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பொறுப்பேற்றாா். பதவியேற்ற சில மணிநேரங்களில் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தினா் வெளியேற உத்தரவிட்டாா். இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முகமது மூயிஸ், பிரதமா் மோடியை சந்தித்தாா். இருவரும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். அதன்பிறகு இந்தியா-மாலத்தீவு இடையே நட்புறவு தொடா்ந்து வருகிறது.
அதன் வெளிப்பாடாக 300 மாலத்தீவு மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், படகு சேவைகளை அதிகப்படுத்த 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் மற்றும் கடனுதவி என மாலத்தீவில் பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.