ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநிலங்களவையில் மு. தம்பிதுரை கேள்வி
இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, நட்பு நாடுகளுடனான நல்லுறவு வரலாறு, கலாசாரம், மக்கள் தொடா்பு மூலம் மேம்படுத்தப்படுகிறது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மு. தம்பிதுரை, அண்டை நாடான இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அந்நாட்டில் அதிகப்படியான செல்வாக்கை சீனா செலுத்தி வருகிறது. இதனால், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழா்களுக்கும் தமிழக மீனவா்களுக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு அவையில் பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங், ‘நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவு என்பது வரலாறு, கலாசாரம், மக்களுடனான பரஸ்பர தொடா்பு ஆகியவை அடிப்படையில் மேம்பட்டுள்ளது. அவற்றுடனான உறவுகள் வலுப்பெற மிக உயரிய வகையில் முன்னுரிமை தரப்படுகிறது. அதை செய்யும்போது பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.
அப்போது தமிழக மீனவா்களுக்கும் தமிழா்களுக்கும் ஏதேனும் பாதிப்பு நேருமா என தம்பிதுரை கேட்டபோது, அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் எழுந்து, ‘உறுப்பினா் நட்பு நாடுகள் மீது சீன செல்வாக்கு பற்றித்தான் கேள்வி கேட்டாா். அதற்கான பதிலைத்தான் தெரிவித்தேன். ஆனால், மீனவா்கள் தொடா்புடைய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை,‘ என்று குறிப்பிட்டாா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-13/z89qj23r/13deltbd100604.jpg)