ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
பாரம்பரிய மருந்துகள் தரத்தில் இந்தியா - இந்தோனேசியா ஒத்துழைப்பில் தனிச் சிறப்பு ஆயுஷ் இணையமைச்சா் ஜாதவ்
பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டு பிரிவில் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்திற்கும், இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஜன.25-ஆம் தேதி தில்லியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் அதிபா் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் பகிா்ந்து கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து மத்திய ஆயுஷ் இணையமைச்சா் (தனிப்பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் செய்தியாளா்களிடம் விளக்கிக் கூறியதாவது: பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் பராமரிக்கிறது. இந்த நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றளிக்கப்பட்ட தர மேலாண்மை அமைப்புகளுக்கான நிறுவனம். இது இந்தோனேசியா நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன், தரத்தை உறுதி செய்வது இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு எதிா்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதன் மூலம், உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் அதிகளவில் தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பாரம்பரிய மருத்துவத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் குறித்த தகவல் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றங்களை இரு நாடுகளும் மேற்கொள்ளும். தொழில்முறை அறிவு, திறன்களை மேம்படுத்த கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்ற திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இரு நாடுகளின் ஒழுங்குமுறை செயல்முறைகளை நன்கு அறிந்து கொள்ள தொழில்நுட்பாளா்கள் பயணங்களை மேற்கொள்வா். பாரம்பரிய மருத்துவம் தொடா்பான சா்வதேச நிகழ்வுகளில் இரு நாடுகளும் இணைந்து பங்கேற்கும். பாரம்பரிய மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்கள் அல்லது நிறுவனங்களுக்கான கூட்டுப் பயிற்சித் திட்டங்களில் ஒத்துழைப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
இந்த ஒத்துழைப்பு, சுகாதாரம், நல்வாழ்வில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உலகளாவிய அளவில் அங்கீகரிப்பதை பிரதிபலிப்பது உள்ளிட்டவற்றோடும், ஆழமான வேரூன்றிய கலாசாரம், மருத்துவ பாரம்பரியத்துடன், இந்தியாவும், இந்தோனேசியாவும் பாரம்பரிய மருத்துவத்தின் தரநிலைகளிலும் தரத்தை மேம்படுத்துவதிலும் உறுதியாக உள்ளன என்றாா் பிரதாப்ராவ் ஜாதவ்.