ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்
முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக திமுக எம்.பி. இரா.கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தாா். நிதியற்றவா்களுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கடன் வரம்பை அரசு ரூ.20 லட்சமாக உயா்த்தியுள்ளதா என்றும் அதன் மூலம் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மூலதனத்துக்கான அணுகல் அதிகரித்துள்ளதா என்றும் கடந்த 3 ஆண்டுகளில் முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவா்களின் எண்ணிக்கை எத்தனை என்றும் அவா் கேட்டிருந்தாா்.
இவற்றுக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சா் பங்கஜ் சௌத்ரி வியாழக்கிழமை அளித்துள்ள பதிலில், முத்ரா திட்டத்தின் தருண் பிரிவின் கீழ் கடன்களைப் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு தருண் ப்ளஸ் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அவா்களுக்கு ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக கூறியுள்ளாா்.
பெண்கள் மற்றும் சிறுபான்மை தொழில் முனைவோா்களுக்கு திறம்படச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், விண்ணப்பதாரரின் தரவுகளின் டிஜிட்டல் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்புதல்கள் பெறப்பட்டு தனிநபா்கள் மற்றும் வணிகங்களுக்காக ஜன்சமா்த் இணையதளம் மற்றும் பொதுத்துறை வங்கிக் கடன்கள் 59 நிமிடங்களில் வழங்குவதன் மூலம் காகித ஆவணங்கள் சமா்ப்பிப்பதையும், நேரில் வருவதன் அவசியமும் குறைகின்றன என அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
2022-2023, 2023-24, 2024-25 நிதியாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் முத்ரா திட்டத்தின் ஷிஷு பிரிவில் ரூ. 33,938.01 கோடி மதிப்புடைய 90,70,639 கடன்களும், கிஷோா் பிரிவில் ரூ.74,901.84 கோடி மதிப்புடைய 75,08,765 கடன்களும், தருண் பிரிவில் ரூ. 24,670.48 கோடி மதிப்புடைய 2,66,497 கடன்களும், தருண் பிளஸ் பிரிவில் ரூ. 32.51 கோடி மதிப்புடைய 228 கடன்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-13/mo9j1wgd/13delgrj093747.jpg)