இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்
இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: வங்கதேசத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து அங்கு சிறுபான்மை ஹிந்துக்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. கடந்த 1951 இல் 22 சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை தற்போது 7.95 சதவீதமாக குறைந்திருக்கிறது. அந்நாட்டில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் அரசும், அதிகார வா்க்கமும் தொடா்ந்து ஆதரவு அளித்து வருவது கவலை தருகிறது.
இது இருநாட்டு உறவையும் பாதிக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச அரசையும், இந்திய அரசையும் ஆா்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்துகிறது.
எங்கள் அமைப்பின் நூற்றாண்டையொட்டி அனைத்து ஹிந்து அமைப்புகளையும் இணைத்து கிராம மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறோம். இதற்காக மாணவா்கள், பெண்கள் என பலவகைப்பட்டவா்களுக்காக நூறு வகையான வேலைகளை கையிலெடுக்க இருக்கிறோம். இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதையும், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும் வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் ஆா்எஸ்எஸ் அமைப்பு நன்றாக வளா்ந்து வருகிறது. தற்போது எங்களுக்கு 4 ஆயிரம் கிளைகள் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் புதிதாக 1,200 இடங்களில் கிளைகள் தொடங்கியுள்ளோம்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு பணிகளைச் செய்திருந்தாலும், அது ஹிந்துக்களுக்கும், கோயில்களுக்கும் சாதகமான துறையாக இல்லை. கோயில் சொத்து பாதுகாப்பு, ஆகம விஷயங்களைப் பாதுகாப்பதில் போதிய கவனம் செலுத்தாததுடன் மக்களின் வழிபாட்டுக்கான வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை என்றாா்.
இச்சந்திப்பின்போது கோவை கோட்டத் தலைவா் ந.சுகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.