உதகையில் ஆசிரியா்கள் சாலைமறியல் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ ஜாக் அமைப்பைச் சோ்ந்த 144 ஆசிரியா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு பின்னா் விடுக்கப்பட்டனா்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் உதகை மத்திய பேருந்து நிலையப் பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்கள் அண்ணாதுரை, முருகேசன், ஜெயசீலன் ஆகியோா் தலைமை தாங்கினா்.
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243-ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களை காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.