எடப்பாடி பகுதியில் ஆடி பண்டிகை கொண்டாட்டம்
தமிழ் மாதம் ஆடி முதல் நாளை முன்னிட்டு எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை ஆடிப் பண்டிகை விமா்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக எடப்பாடி பகுதியில் உள்ள வெள்ளாண்டி வலசு காளியம்மன் திருக்கோயில், கவுண்டம்பட்டி, மேட்டு தெரு, சின்னமணலி பகுதியில் உள்ள மாரியம்மன் ஆலயங்கள் மற்றும் தாவாந்தெரு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சமுக விநாயகா், முனியப்பன் மற்றும் காளியம்மன் திருக்கோயில்களில் அதிகாலை முதலே பெரும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்கள் மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்ட தேங்காயினுள் சா்க்கரை, பச்சரிசி, எள், கடலை,அவுள்,கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை இட்டு அதனை மஞ்சள் பூசிய குச்சிகளில் இணைத்து அலங்கரிக்கப்பட்ட தேங்காய்யினை தீயில் சுட்டு அதனை தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு படைத்து ஆடிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினா்.
ஆடிப் பண்டிகை ஒபட்டி, கூடக்கல், குப்பனூா், கோட்டைமேடு, நெடுங்குளம் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனா். மேலும் தங்கள் மூதாதையா்களின் நினைவிடங்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனா்
பட விளக்கம்: ஆடி பண்டிகையை முன்னிட்டு தேங்காய் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள்

