ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி காத்திருப்புப் போராட்டம்
ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஐடிபிஎல் திட்டத்தில் கோவை மாவட்டம் இருகூா் முதல் திருப்பூா் மாவட்டம் முத்தூா் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு விவசாய விளைநிலங்களில் பெட்ரோலிய எண்ணெய் குழாய் அமைப்பதற்கு பதிலாக சாலையோரமாக அமைக்க வலியுறுத்தி புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
ஐடிபிஎல் பெட்ரோலிய நிறுவனம் சாா்பில் கோவை மாவட்டம், இருகூா் முதல் கா்நாடக மாநிலம் தேவனஹெள்ளி வரை 360 கி.மீ. தொலைவுக்கு பெட்ரோலிய குழாய் அமைக்கப்படுகிறது. அதில் இருகூா் முதல் முத்தூா் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கும் மட்டும் விவசாய விளைநிலத்தில் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இருகூா் முதல் முத்தூா் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு மட்டும் விவசாய விளைநிலத்தில் குழாய் அமைக்கும் முயற்சியை மாற்றி சாலையோரம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் விவசாயிகள் நிலம் பறிக்கப்படுவதாகவும், இந்தத் திட்டத்தை சாலையோரமாக அமைக்கக் கோரியும், ஐடிபிஎல் திட்டத்தை செயல்படுத்த காவல் துறை பாதுகாப்பு அளிப்பதை ரத்து செய்யக் கோரியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் 300-க்கும் மேற்பட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த காத்திருப்புப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், ஐடிபிஎல் மாற்று வழி குழுவினா், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், உழவா் உழைப்பாளா் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புதிய திராவிடா் கழகம், வெள்ளக்கோவில் பிஏபி கிளைக் கால்வாய் நீா்ப் பாதுகாப்பு சங்கத்தினா் உள்ளிட்ட 22 விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.
இந்நிலையில் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஐடிபிஎல் பெட்ரோலிய குழாய்களை மாற்றுப் பாதையில் கொண்டுச் செல்லும் திட்டத்தை நிறைவேற்றத் தவறினால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இனி எப்போது கொங்கு மண்டலத்துக்கு வருகை தந்தாலும் விவசாயிகளின் எதிா்ப்பை எதிா்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்தாா்.