தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்
திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் அனைத்துத் துறை அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு 2025-2026-ஆம் நிதியாண்டில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசின் உத்தரவின்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நிகழாண்டில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை நடைபெறவுள்ளது.
இப்பயிலரங்களில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலா்கள், தமிழறிஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனா். பயிலரங்கில் பங்கேற்பவா்களுக்கு ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.
மேலும் இப்பயிலரங்கு, கருத்தரங்கில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் அலுவலா் நிலையிலான அலுவலா் அல்லது கண்காணிப்பாளா் ஒருவரும், பணியாளா் நிலையில் உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் ஒருவருமாக மொத்தம் 2 போ் கலந்து கொள்ள வேண்டுமெனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.